×

தமிழ்நாடு அரசு திரைப்பட கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்: 20ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை: தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்களை நாளை முதல் 20ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம்.

இந்நிறுவனம் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வரும் தனித்துவம் மிக்க நிறுவனம். இந்தியாவிலேயே முதன் முறையாக திரைப்பட தொழில்நுட்பங்களுக்கென 2016-2017ம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்று இளங்கலை காட்சிக்கலை எனும் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகளை பயிற்றுவித்து வரும் தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில், 2024-2025ம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. இளங்கலை காட்சிக்கலை – ஒளிப்பதிவு

2. இளங்கலை காட்சிக்கலை – எண்மின இடைநிலை

3. இளங்கலை காட்சிக்கலை – ஒலிப்பதிவு

4. இளங்கலை காட்சிக்கலை – இயக்குதல் மற்றும் திரைக்கதை எழுதுதல்

5. இளங்கலை காட்சிக்கலை – படத்தொகுப்பு

6. இளங்கலை காட்சிக்கலை – உயிர்ப்பூட்டல் மற்றும் காட்சிப்பயன்
எனவே, கலை ஆர்வம் உள்ள அனைத்து மாணவ, மாணவியரும் மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவுகளில் சேர்ந்து பயனடையலாம். இதற்கான விண்ணப்பங்களை நாளை (2ம் தேதி) முதல் 20ம் தேதி வரை www.tn.gov.in எனும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் முதல்வர் (மு.கூ.பொ), தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், சி.ஐ.டி. வளாகம், தரமணி, சென்னை – 600113 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் மட்டுமே வரும் 27ம் தேதி மாலை 5 மணிக்குள் வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை பெற நேரடியாக வர வேண்டாம்.

The post தமிழ்நாடு அரசு திரைப்பட கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பம்: 20ம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government Film College ,Chennai ,Tamilnadu Government MGR Film College ,Tamil Nadu Government ,Tamil Nadu Government MGR Film and Television ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...